மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க்கல்விக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பளிங்கு வெட்டு பதிக்கும் திகழ்ச்சி மற்றும் தமிழ்க்கல்வி வரலாற்று நூல் வெளியீட்டு விழா எதிர்வருகின்ற 11 ஜூலை 2017 ம் தேதி தாமான் பெர்மாத்தாவில் நடைபெறுகிறது. பிரதம மந்திரி விழாவினை துவக்கி வைக்கிறார். இதற்கான கல்வி அமைச்சகத்தின் அழைப்பை மத்திய கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன் வெளியிட்டார்.
மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தி அடையும் இவ்வினிய வேளையில், மலேசிய அரசாங்கம் இதனை அங்கீகரிக்கும் வகையில் 200-ம் ஆண்டு மலேசியாவில் தமிழ்கல்வி எனும் மாபெரும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது. இம்மாபெரும் சரித்திர கொண்டாட்டத்தின் உச்சக்கட்டமாக பளிங்கு வெட்டு பதிக்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ்ச்க்கல்வி வரலாற்று நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 11 ஜூலை 2017-ம் தேதி மாலை 04.00 மணிக்கு தாமான் பெர்மாத்தா (டெங்கில், சிலாங்கூர்) தமிழ்ப்பள்ளியில் கோலாகலமாக நடைபெறவிருக்கின்றது. உலகிலேயே இந்தியாவுக்கு அடுத்த நாடாக தமிழ்மொழியை கொண்டாடிய நாடு மலேசியாவாகும். மக்களின் மொழியைக் கொண்டாடி அதன் சிறப்பை உலக அரங்கில் உயர்த்த முயற்சிக்கும் நமது பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களுக்கு இந்திய சமுதாயத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்ச்சியை மலேசிய பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார். பிரதமரோடு இணைந்து அனைத்து மலேசிய இந்திய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர். இச்சரித்திர கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.