கோலாலம்பூர், 6 ஜூலை 2017 – தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை உலக அரகில் முன்னெடுத்து செல்லும் நோக்கில் உருவாக்கம் கண்ட மாணவர் முழக்கம் போட்டி, இவ்வருடம் தொடர்ந்து 7-வது முறையாக நடைப்பெறவுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய இப்போட்டி நம் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தேசிய அளவில் அடையாளம் காட்டியபோது, உலக அரங்கிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு முதல் முறையாக அனைத்துலக மாணவர் முழக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
2011-ஆம் ஆண்டு குழுக்கள் மோதும் சொற்போராக தொடங்கப்பட்டு, பின்னர் மாணவர்களின் தனி திறமையை மேம்படுத்தும் தனி நபர் பேச்சுப் போட்டியாக உருமாற்றம் கண்டது இந்த ‘மாணவர் முழக்கம்’ நிகழ்ச்சியாகும்.
அதனைத் தொடர்ந்து, 2015 மற்றும் 2016 என மூன்று ஆண்டுகள் அனைத்துலக ரீதியான போட்டி வெற்றிகரமாக நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த சிறந்த தளமாக விளங்கியது.
அதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டுக்கான சிறந்த பேச்சாளரை அடையாளம் காணும் நோக்கில் மாணவர் முழக்கம் 2017 ஆரம்பமாகிவிட்டது.
இப்போட்டியில், ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு தலைப்புகள் வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அந்த மாணவர் தனது கருத்துகளை முன் வைக்க வேண்டும். பிறகு நடுவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதோடு மற்ற போட்டியாளர்களின் கருத்துகளையும் வெட்டிப் பேச வேண்டும். ஆகவே, பேச்சுத் திறன் மட்டுமின்றி. அறிவுத் திறன், வாதத் திறன் ஆகியவையும் இப்போட்டியில் மதிப்பிடப்படுகிறது.
இப்போட்டியில் தலைமை நடுவராக மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வில் துறை மூத்த விரிவுரையாளரான சிவபாலன் கோவிந்தசாமி பணியாற்றவுள்ளார்கள். இவருக்குத் துணையாக முனைவர் செல்வ சுப்ரமணியம் ராமையா, முனைவர் இளங்குமரன் மற்றும் பார்வதி அழகப்பன் நடுவர்களாக வலம் வரவிருக்கின்றார்கள்.
நமது மாணவர்களின் பேச்சு திறமையைக் காண ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அஸ்ட்ரோ வானவில்லுடன் (அலைவரிசை 201) இணைந்திருங்கள். அதை வேளையில், ‘அஸ்ட்ரோ கோ’ செயலியின் வாயிலாகக் கண்டு களிக்கலாம்.