கோலாலம்பூர், 23 ஜூலை- கடந்து வியாழக்கிழமை கிழக்கு உக்ரைனில் விபத்துக்குள்ளாகி 298 பேரை பலிகொண்ட MH17 விமானத்தின் 2 கறுப்பு பெட்டிகளும் தடவியல் ஆய்வுக்காக பிரிட்டனுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு, ஆகாயப் போக்குவரத்து விபத்து விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.
அனைத்துலக ஆகாயப் போக்குவரத்து அமைப்பின் அங்கீகாரம் பெற்ற மிக அருகில் இருக்கு ஆய்வு நிலையங்களுக்கு கறுப்பு பெட்டிகளை அனுப்பி வைப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான் என அமைச்சர் தெரிவித்தார்.
“அந்த வகையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டிகள் மலேசிய நிபுணர்கள் மற்றும் இதர அனைத்துலக விசாரணைக் குழு உறுப்பினர்களுடன் பிரிட்டனில் Farnborough என்ற இடத்திற்கு அனுப்பப்படும்” என்றார் அவர்.
விமான விபத்துக்கான அனைத்துலக விசாரணைக்கு நெதர்லாந்து தலைமையேற்கும். முன்னதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் பிரிவினைவாத தலைமை கமாண்டர் அலெக்ஸாண்டர் பொரோடையிடம் பேச்சுவார்த்தை நடத்தியன் மூலம் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.