அரசாங்கம் அறிவித்துள்ள இந்தியர்களுக்கான செயல் திட்டம் (புளுபிரின்ட்) வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்ய இன்று சமுதாய ஆலோசனை மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தில் அரசு சாரா அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், சமூக இயக்கங்களின் தல்லவர்கள் – பிரதிநிதிகள் என 30 பேர் இடம் பெற்றுள்ளனர். பிரதமரின் ஆலோசனையின் பேரில் இம்மன்றம் அமைக்கப்பட்டுள்ளது என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இம்மன்றத்தின் முதலாவது கூட்டம் இன்று புத்ராஜாயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர், புளுப்பிரின்ட் நிர்வாகச் செயற்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்தியர்களுக்கான செயல் திட்ட அமலாக்கத்தில் ஏழு முக்கிய துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்மன்றம் அத்திட்டங்கள் வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்ய தேவையான ஆலோசனைகளை வழங்கும் என டத்தோஸ்ரீ மேலும் விவரித்தார். அத்திட்டங்கள் பின்வருமாறு:
1. சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் நிதியுதவி வழங்குதல்;
2. வறுமை கோட்டுக்குக் கீழுள்ளள பி40 நிலையிலுள்ளவர்களை அடையாளங் கண்டு அவர்களுக்கு அரசாங்கத்தின் உதவியைப் பெற உதவுதல்;
3. தமிழ்பள்ளிகளின் கட்டுமானப் பணி திட்டமிடப்பட்டுள்ளள காலத்திற்குள் நிர்மாணிக்கப்படுவதை உறுதிச் செய்தல்;
4. ஆவண பதிவு சிறப்புக் கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்துதல்;
5. வசதி குறைந்த மாணவர்களுக்கான தங்குமிட வசதியை ஏற்படுத்துதல்;
6. வழிப்பாட்டுத் தளங்களை மக்கள் சமூக மையங்களாக மேம்படுத்த ஊக்குவித்தல்; மற்றும்,
7. பிரதமர் துறையின் கீழ் செயல்படும் எஸ்.ஐ.டி.எப். (SITF) எனப்படும்
இந்தியர்களுக்கான சிறப்பு அமலாக்க நடவடிக்கைக் குழுவின் ஓரிட சேவை மையங்களை நாடு முழுவதும் 10 இடங்களில் அமைத்தல்.
சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் இந்த விவரங்களை இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.