கடந்த ஐந்தாம் திகதி தொடங்கி இன்று வரை(22/06/2017) நாடு முழுவதும் 23 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் “மெகா மை டப்தார்” ஆவணப் பதிவு நடவடிக்கையின் வழி ஏறத்தாழ 2,500 பேர் பதிவு செய்துள்ளனர் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
22/06/2017 அன்று காலை புத்ராஜாயாவிலுள்ள தேசியப் பதிவுத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற ஆவணப் பதிவு நடவடிக்கையைப் நேரடியாகப் பார்வையிட்டப் பின்னர், அங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மத்திய சுகாரத்துறை அமைச்சரும் ம இ கா தேசியத் தலைவருமான அவர் இதனைத் தெரிவித்தார்.
இதே போன்றதொரு ஆவணப் பதிவு நடவடிக்கை 2011 ஆண்டு பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாடு முழுவதும் ஏறத்தாழ 12,726 பேர் பல்வேறு காரணங்களுக்காகப் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 3,721 பேருக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டு விட்டன. ஏனைய விண்ணப்பங்கள் இன்னும் பரிசினையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இம்முறை ஆவணப் பதிவு இயக்கத்தின் வழி பதிவு செய்து கொண்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் குடியுரிமை, அடையாள அட்டை, பிள்ளைகளைத் தத்தெடுப்பது, பிறப்புப் பத்திரம் போன்ற பிரச்சனைகளுக்காக வந்துள்ளனர் என டத்தோஸ்ரீ மேலும் கூறினார்.
போதிய ஆவணங்கள் இல்லாத காரணங்களால் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண காலத் தாமதம் ஆகலாம். அவர்கள் பொறுமை காக்க வேண்டும். சில பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நடப்புச் சட்டங்கள் தடையாக உள்ளன. குறிப்பாக பிள்ளைகளைத் தத்தெடுப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இவ்விவகாரம் குறித்து ம இ கா சமூக நலத் துறையுடன் பேச்சு நடத்தும். மேலும், தீர்வுக் காண முடியாத விவகாரங்கள் நேரடியாகப் பிரதமர் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மலேசியாவில் இன்னும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் எவ்வித அடையாள ஆவணங்களும் இன்றி நாடற்றவர்களாக இருப்பதாக சிலர் குற்றம் சாட்டி வருவதைத் தொடர்ந்து, உண்மை நிலையைக் கண்டறிய அரசாங்கம் “மெகா மை டப்தார்” எனும் மாபெரும் ஆவண பதிவு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்த்து. இந்நடவடிக்கை இம்மாதம் ஜூன் 5 ஆம் திகதி தொடங்கி ஜூன் 22 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியர்களின் நலனுக்காகப் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் செடிக், உள் துறை அமைச்சு, தேசியப் பதிவு துறை உட்பட, 13 அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து இந்த ஆவண பதிவு நடவடிக்கை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.