இன்று 26/03/2017 அன்று மாண்புமிகு சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மலேசிய கல்வி துணையமைச்சர் மாண்புமிகு கமலநாதன் அவர்களும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமச்சர் டத்தோ எம்.சரவணன் அவர்களும் இணைந்து கஜாங், செலாங்கூரில் உள்ள தேசிய வகை பாங்கி தமிழ்ப்பள்ளியின் புதிய இணைக்கட்டடம் மற்றும் கணினி அறை திறப்பு விழாவிற்கு வருகையளித்திருந்தனர்.
நாட்டில் இருகக்கூடிய பல தமிழ்ப்பள்ளிகளைப் போன்று கடந்த 1953ஆம் ஆண்டு ப்ரூம் தோட்டத்தில் தொடங்கப்பட்ட இப்பள்ளி தற்பொழுது தேசிய வகை பாங்கி தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டு ஓர் இணைக்கட்டடமும் கணினி வகுப்பறையும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இப்புதிய கட்டடம் முழுமையான சேவையைத் தற்பொழுது இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. ஏறக்குறைய 110 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
தற்பொழுது நாட்டுப் பிரதமர் அவர்கள் உதவியோடு ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கக்கூடிய நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை ம.இ.கா செயல்படுத்தி வருகின்றது . இவற்றில் ஒரு திட்டம் யாதெனில் தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளி இருக்க வேண்டுமென்பதே ஆகும். தற்பொழுது ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளி இல்லை. இதனைக் பகுதிவாரியாக சரிசெய்யும் பொருட்டு முதல் கட்டமாக 50 தமிழ்பள்ளிகளில் பாலர் பள்ளி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் வெகு விரைவில் பாலர் பள்ளி கட்டப்பட வேண்டுமென பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பள்ளிக்கூடத்திலும் விரைவாகப் பாலர் பள்ளி கட்டப்படும் என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் அவர்கள் உறுதியளித்துள்ளார். அரசாங்கமும் பாலர் கல்விக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் இருக்கக்கூடிய எல்லாத் தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் கல்வி தொடங்கப்பட வேண்டும் என்பதே ம.இ.காவின் நோக்கமாகும். இந்நோக்கம் வெற்றிப் பெற ம.இ.கா முழுமையாகச் செயல்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்தார்.