மலேசியர்களுக்கு தரமான சிகிச்சை வழங்க சுகாதர அமைச்சின் தொடர் நடவடிக்கை குறித்து மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்

மலேசியர்களுக்கு தரமான சிகிச்சை வழங்க சுகாதர அமைச்சின் தொடர் நடவடிக்கை குறித்து மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்

01mar

மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களின் இன்றைய 01/03/2017 பத்திரிக்கைச் செய்தி

மலேசிய சுகாதார அமைச்சு வாழ்க்கை முறையின் அடிப்படையில் ஏற்படக்கூடிய நோய்கள் எனப்படும் தொற்றா நோய்கள் (Non-Communicable Diseases) தொடர்பான சுமையைக் குறைக்கும் அடிப்படையிலும், நாட்டில் மக்கள் எதிர்நோக்கி வரும் சுகாதார பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கும் சில உருமாற்றத் திட்டங்களை உருவாக்கி வருகின்றது.

ஏனென்றால், நமது ஆய்வின்படி மலேசியாவில் அதிகமானோர் உடல் பருமனுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, இனிப்பு நீர், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகமாயிருத்தல் போன்ற பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் 40 வயதிற்கும் மேற்பட்ட பலர் பலவிதமான நோய்களுக்குப் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித் தரத்தையும் குறைக்கின்றது.

இதனைச் சரிசெய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு சில ஆக்ககரமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சு பல தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, மலேசியர்கள் அனைவரையும் தரவு அடிப்படையில் (Database) கொண்டு வருவதோடு அவர்களுடைய சுகாதார விவரங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களின் சாத்தியத்தையும் ஆராய்ந்து விரைவாகவும் தரமான சிகிச்சையையும் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

அதேநேரத்தில், ஏற்கனவே இருக்கக்கூடிய சுகாதார மையங்களின் மேம்பாட்டுத் தரத்தை உயர்த்துவதற்காக பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலான சிகிச்சையை வழங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி, நிபுணத்துவம் உட்பட நோயாளிகளுக்குப் பல கோணத்தில் சிகிச்சையை வழங்கும் சூழலுக்கான முயற்சியையும் எடுத்து வருகிறோம். அதிகமான கணிணி, இணையம் வசதிகளைப் பயன்படுத்தி எளிதான முறையில் சிகிச்சை வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருக்கின்றது.

இம்மாற்றங்களின் வழி எல்லாவிதமான நோய்களுக்கும் அதன் தாக்கம் அறியப்படும் முன்னரே சிகிச்சைகள் வழங்க ஏதுவாக அமையும். நோய் கண்டறியப்பட்டவர்களுக்கும் முழுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். கிடைக்கக்கூடிய முழுமையான சிகிச்சையின் அடிப்படையில் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரவும் இயலும்.