உக்ரைனில் 298 பேர் பலியாக காரணமான மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா இந்த எச்சரிக்கையை விடுத்தார். உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு கொடுப்பது தொடர்ந்தால் அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்று அவர் நேரடியாக எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்திய அவர், விசாரணைக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் தெரிவித்தார். ரஷ்யாவும் உக்ரைனும் இணைந்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் வல்லமை அந்நாடுகளுக்கு உண்டு என்றும் ஒபாமா சுட்டிக்காட்டினர். அதே நேரம் உக்ரைனில் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ரஷ்யாவின் ஆதரவு இல்லாமல் கிளர்ச்சியாளர்களால் செயல்பட முடியாது என்று கூறிய அவர், தேவையான ஆயுதங்களை வழங்கி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். தகுந்த பயிற்சி மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் இது போன்ற தாக்குதலை நிகழ்த்திவிட முடியாது என்றும் ஒபாமா கூறினார். கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் அதற்கு ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். விமான எதிர்ப்பு ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்தார்.