MH17 விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் மீண்டும் நமது நாட்டை சோகத்தில் மூழ்கியுள்ளது. நேற்று ஹாலந்து நாட்டு தலைநகரத்திலிருந்து கோலாம்பூரை நோக்கி புறப்பட்ட இந்த விமானம் யுக்ரேன் நாட்டு பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
யுக்ரேன் அரசு படைகள், ரகசிய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் போர் நடத்தி வரும் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறுகின்றன. இதன் முழு விபரம் விசாரணைக்குப் பிறகே நமக்கு தெரிய வரும். இது எந்த நாட்டின் தவறு என்று கண்டறியப்பட்டு சர்வ தேச அளவில் தண்டனை வழங்கப்படுவதை நமது அரசாங்கத்துடன் மற்ற நாடுகளும் உறுதி செய்யவேண்டும்.
எது எப்படி இருந்தாலும், என்ன காரணம் வழங்கப்பட்டாலும் அந்த விமானத்தில் பயணித்த 295 பேரின் இறப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அதில் ஐநாவின் சிறப்பு அதிகாரி, தலைசிறந்த ஏய்ட்ஸ் நோய் மருத்துவர், 80 குழந்தைகள் என்று 32,000 அடி உயரத்தில் பறந்து சென்ற விமானத்தில் இருந்தவர்கள் இன்று நம்முடன் இல்லை. நமது நாட்டு அரசாங்கம் சிறந்த விமானத்தின் மூலம் மீட்பு மற்றும் துயர்துடைப்பு பணிக்குழுவை கிவ் நகரத்திற்கு அனுப்பியுள்ளது.
மிகவும் வேதனை தரும் சம்பவம் இது. MH370 பற்றியே நாம் ஆழ்ந்து ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் வேளையில், இச்சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. நாம் அனைவரும் இன மத பேதமின்றி ஒன்றாக இணைந்து பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக பிராத்திப்பதுடன் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க இறைவனை வேண்டுவோம்.
இவ்வாறு மஇகா தேசிய இளைஞர் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இளைஞர் பிரிவின் தலைவர். திரு.C. சிவராஜ் அவர்கள் தமது இரங்கல்களை தெரிவித்தார்.