ஐ.நா.வில் இந்திய வீரர்களுக்கு புகழாரம்

ஐ.நா.வில் இந்திய வீரர்களுக்கு புகழாரம்

Troops

முதலாம் உலகப் போர் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

“அமைதியை நிலைநாட்ட போர் அளிக்கும் பாடம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் ஐ.நா. தூதுக்குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தின.

நிகழ்ச்சியில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன், “”வரலாற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய போர்களில் ஒன்றான முதல் உலகப் போரில் உயிரிழந்த பல கோடி பேரை நினைவில் கொள்ளவேண்டிய நாள் இது.

எல்லா சண்டைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர் என்று முதல் உலகப்போர் தொடங்கியபோது கூறப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்ததென்னவோ அதற்கு நேர்மாறாகத்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வரலாறு அளித்த அந்தப் படிப்பினையை உணராமல், இன்றும் உலகில் பலர் நல்லிணக்கத்துக்குப் பதிலாக போரைத் தேர்ந்தெடுப்பது வருத்தமளிக்கிறது” என்றார்.

ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி பேசுகையில், “”முதல் உலகப் போரில் மருத்துவ, தொழில்நுட்ப சேவைகளையும் இந்திய வீரர்கள் மிகப்பெரிய அளவில் வழங்கினர்.

பிரிட்டன் படையினருக்கு அடுத்தபடியாக இந்திய ராணுவத்துக்குத்தான் அதிக உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. முதல் உலகப் போரில்தான் இந்திய ராணுவம் முதல்முறையாக முழு பரிமாணத்தை அடைந்தது” என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய வீரர் குலாம் ரசூல் கான், போர் முனையிலிருந்து 1916-ஆம் ஆண்டு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் வாசிக்கப்பட்டது.

அத்துடன், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் வீரர்களின் இரு கடிதங்களும் வாசிக்கப்பட்டன.

1914-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய முதல் உலகப் போரில் பொதுமக்கள் உள்பட 3.7 கோடி பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.