நவம்பர் 19, லைபீரியாவில் இருந்து இந்தியா திரும்பிய ஒருவர் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைபீரியாவில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய இளைஞருக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி டெல்லி வந்த அந்த இளைஞரின் ரத்த பரிசோதனையில் நடத்தப்பட்ட ஆய்வில் எபோலோ வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்படவில்லை. இருப்பினும் அவரது விந்தனு மாதிரிகளை சோதனை செய்ததில், அவர் எபோலாவினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா திரும்பியுள்ள அந்த இளைஞர் எபோலா வைரசினால் பாதிக்கப்பட்டு லைபீரியாவில் சிகிச்சை பெற்றுள்ளார். பூரண குணமாகிவிட்டதாக அந்நாட்டில் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில் அவர் இந்தியா திரும்பியுள்ளார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இதுகுறித்து பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.