அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா கடந்த 06/07/2014 அன்று மாலை 06.30 க்கு அம்பாங் லெம்போ ஜெயாவில் அம்பாங் மஇகா இளைஞர் படையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு ச.சிவராஜ், அம்பாங் தொகுதியின் தேசிய முன்னனியின் தலைவர் டத்தோ ஹஜி இஸ்மாயில் பின் கிஜோ, மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாசார அறவாரிய தலைவர் திரு டி.மோகன், மக்கள் நலன் மற்றும் ககாசான் 1 மலேசிய ஆதரவாளர் கழக தலைவர் திரு.ஜெ.கலைமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
அம்பாங் இளைஞர் படையின் தலைவர் மற்றும் சிலாங்கூர் மாநில இளைஞர் படையின் துணைத்தலைவருமான திரு. சுந்தரம் குப்புசாமி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மஇகாவெனும் மாபெரும் குடையில் இவ்விளைஞர் படையும் ஓர் அங்கமே. இளைஞர் படை உருவாகியதின் முதன்மை நோக்கம் கட்சியில் உறுப்பினர் அல்லாத இளைஞர்களும் நாட்டிற்க்கும் மக்களுக்கும் சேவையாற்ற வழிவகுக்க வேண்டுமென்பதே. தற்போது இவ்விளைஞர் படையில் 80% உறுப்பினர்கள் கட்சி சார்பற்ற இளைஞர்களே.
இவ்விளைஞர் படையின் மாபெரும் வெற்றி டிசம்பர் மாதம் 2013 பகாங் மற்றும் ஜொகூர் மாநில வெள்ள பேரிடரில் பாதிக்க பட்டவர்களுக்கு 1000க்கும் மேற்பட்ட இளைஞர் படை உறுப்பினர்கள் பேருதவியாக விளங்கினர் என திரு. சிவராஜ் தமது உரையில் கூறினார்.
அம்பாங் இளைஞர் படையின் முதல் முயற்சியாக இச்சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனுடன் குமி KUMI (Kumpulan Usahawan Muda India) இயக்கமும் அறிமுகப்படுத்த பட்டது. இளைய தலைமுறையினர் பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டுமெனும் நோக்கத்தில் இவ்வமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அதன் பொருப்பாளர் தெரிவித்தார்.