என் தமிழ்

மலேசிய இளைஞர்கள் STEM, டிஜிட்டல் திறன்களில் தேர்ச்சி பெற வேண்டும் – மலேசிய இளைஞர் மன்றத் தலைவர் வலியுறுத்தல்

கோலாலம்பூர், 21 அக்டோபர் 2026 : மலேசியாவின் ஏற்றுமதி வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வளர்ந்து வரும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் உருவாகும் வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள இளைஞர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) மற்றும் டிஜிட்டல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என மலேசிய இளைஞர் மன்றத்தின் (MBM) தலைவர் முகமட் இஸ்ஸாட் அஃபிஃபி அப்துல் ஹமீத் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மலேசியாவின் ஏற்றுமதி வரலாற்றில் முதன்முறையாக RM200 பில்லியனைத் தாண்டி, RM215.11 பில்லியனை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 54.5 விழுக்காடு அதிகமாகும். குறிப்பாக, மின்சாரம் மற்றும் மின்னணுப் பொருள்களின் (E&E) ஏற்றுமதி வளர்ச்சி இதற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்தப் பொருளாதார வளர்ச்சி உயர் தொழில்நுட்பத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் குறிப்பிட்ட முகமட் இஸ்ஸாட் அஃபிஃபி, அதற்கேற்ப உள்ளூர் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

தற்போது பல இளைஞர்கள் STEM துறைகளில் போதிய அளவில் ஈடுபடாதது முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக அவர் தெரிவித்தார். தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நிரப்பப்படுவதைத் தவிர்க்க, உள்ளூர் இளைஞர்கள் இத்துறைகளில் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு (AI), கணினிக் குறியீட்டாக்கம் (Coding), கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் இளைஞர்கள் தங்களது அறிவையும் திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியப் புள்ளிவிவரத் துறையின் (DOSM) தகவலின்படி, செப்டம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த வர்த்தகம் 53.7 விழுக்காடு அதிகரித்து RM396.5 பில்லியனை எட்டியுள்ளது. அதேவேளை, வர்த்தக உபரி RM33.72 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் உருவாகும் வாய்ப்புகளை உள்ளூர் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள, கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறைத் தேவைகளுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது அவசியமாகியுள்ளது.

Scroll to Top