கோலாலம்பூர், 15 அக்டோபர் 2026 : டாக்ஸி, வாடகைக் கார் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா RM1,000 சிறப்பு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. இதில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பங்கேற்று, மடானி அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த நிதியுதவி குறித்து உரையாற்றினார்.
தொழில்துறையில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாகப் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஓட்டுநர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சியில் பேசிய அன்வார் இப்ராஹிம், 1998ஆம் ஆண்டு சீர்திருத்தப் போராட்டத்தின் கடினமான காலகட்டங்களை நினைவுகூர்ந்தார். அப்போது பலர் தன்னிடமிருந்து விலகியிருந்தபோதும், சில டாக்ஸி ஓட்டுநர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவ முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் சேவையையும் நேர்மையையும் தாம் இன்றளவும் நினைவில் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் கிடைக்கும் பலன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார வலிமைக்கு பங்களிக்கும் தொழிலாளர்களும் அதன் பலன்களைப் பெறுவதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொருவரின் பங்களிப்பையும் மதித்து, உதவி தேவைப்படுவோருக்குத் துணைநின்று, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் எவரும் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொள்வதே மடானி அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.







