செரம்பான், 14 அக்டோபர் 2026 : மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா.) சார்பில், டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், செரம்பான் நகராட்சி மேயர் டத்தோ இரா. டி.எஸ். ஹாஜி மஸ்ரி பின் பஹாருதீனைச் சந்தித்து, தீபாவளி பண்டிகைக் காலத்தில் செரம்பான் நகரில் உள்ள வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் டத்தோ மோகன் வேலாயுதம், கே. முரளி நாத் மற்றும் டத்தோ தினலன் டி. ராஜகோபாலு ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சந்திப்பின்போது, வர்த்தகர்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள், கருத்துகள் மற்றும் கவலைகள் நகராட்சி மேயரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன. அவற்றை மேயர் கவனத்துடன் கேட்டறிந்ததற்கு டத்தோஸ்ரீ எம். சரவணன் நன்றி தெரிவித்தார்.
மேலும், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி, வர்த்தகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய தீர்வுகளை எட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேயர் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வர்த்தகர்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க வாய்ப்பளித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மேயருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வர்த்தகர்கள் தங்களது வியாபாரத்தைச் சுமுகமாக நடத்துவதற்கு ஏதுவாக, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







