கோலாலம்பூர், 14 அக்டோபர் 2026 : இந்தியாவின் புகழ்பெற்ற தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், கோலாலம்பூரில் இசை மற்றும் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாசார மையமும், மலேசியாவுக்கான இந்தியத் தூதரகமும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.
இந்நிகழ்ச்சியில் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, மலேசியாவுக்கான இந்தியத் தூதர் சோம்நாத் கோஷ், இந்தியத் தூதரக அதிகாரிகள், ரஷ்யக் கலாசார மற்றும் அறிவியல் மையத்தின் அதிகாரிகள், மலேசிய வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இசை, நடனம், பொம்மலாட்டம் மற்றும் கதை சொல்லல் ஆகிய கலை வடிவங்கள் ஒன்றிணைந்த நிகழ்ச்சிகள் மூலம் ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாற்றுச் சிறப்பும், தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் தேசியப் பெருமையைத் தூண்டும் அதன் நீடித்த தாக்கமும் எடுத்துரைக்கப்பட்டன.
இந்தக் கலாசார நிகழ்ச்சியைச் சிறப்பாக வழங்கிய வாணி நேதியார், ப்ரீத்தா பிரசாத், தீபா ராஜேந்திர ஒகாடே மற்றும் அவர்களது கலைக் குழுவினருக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். இந்திய விடுதலை உணர்வைத் தூண்டிய ‘வந்தே மாதரம்’ பாடல், தலைமுறைகள் கடந்தும் மக்களிடையே தேசப்பற்றையும் ஒற்றுமையையும் ஊக்குவித்து வருவதை இந்நிகழ்ச்சி நினைவூட்டியது.







