சென்னை, 13 அக்டோபர் 2026 : தமிழ்நாட்டில் அக்டோபர் மாத மின்சாரத் தேவையைச் சமாளிக்க, யூனிட் ஒன்றுக்கு ரூ.37 வரை செலுத்தி மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மின்சாரத் தேவையை முன்கூட்டியே கணிப்பதிலும், கொள்முதலைத் திட்டமிடுவதிலும் ஏற்பட்ட குறைபாடா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TNPDCL), அக்டோபர் 12 முதல் 31 வரை 1,500 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.31.99 முதல் ரூ.34.49 வரையிலும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை உச்சநேரத் தேவைக்காக 2,000 மெகாவாட்டை ரூ.33.37 முதல் ரூ.37 வரையிலும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்திய மின் உற்பத்தி நிலையங்களின் வருடாந்திர பராமரிப்புப் பணிகள், காற்றாலை மின் உற்பத்தி குறைவு ஆகியவற்றால் சுமார் 4,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் உச்ச மின்தேவை சுமார் 17,000 மெகாவாட்டாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 20,000 மெகாவாட்டை எட்டியுள்ளது. தினசரி மின்நுகர்வும் 70 மில்லியன் யூனிட்கள் அதிகரித்துள்ளது.
அக்டோபர் 10-க்குப் பிறகு மின்தேவை குறையும் என எதிர்பார்த்ததாகவும், வடகிழக்குப் பருவமழை தொடங்கும் காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் குறுகியகால ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அதிகரிக்கும் மின்தேவையை முன்கூட்டியே கணித்து நடவடிக்கை எடுக்கத் தவறியதா என்ற கேள்விக்கு அரசு தெளிவான விளக்கமளிக்க வேண்டும்.
ஆந்திரப் பிரதேச மின்சார ஒருங்கிணைப்புக் குழு, இதே காலகட்டத்திற்காக 150 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.16 முதல் ரூ.20 வரை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை செப்டம்பர் 9-ஆம் தேதியே இறுதி செய்துள்ளது. பிற மாநிலங்களின் கொள்முதல் விலைகள் குறித்த ஒப்பீடுகளும், அவற்றின் ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் மின்சாரத் தேவைகளுடன் சேர்த்தே மதிப்பிடப்பட வேண்டும்.
இதற்கிடையில், “மின்சாரம் ஏன் தட்டுப்பாடாகிறது?” என்று கேள்வி எழுப்பும்போது, துறை அமைச்சர் குஜராத்திலும் மின்வெட்டு ஏற்படுகிறது என்றும், எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன என்றும் காரணங்களை முன்வைப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. இத்தகைய பதில்கள் மட்டுமே மக்களின் கேள்விகளுக்குப் போதுமான விளக்கமாகாது. மின்சாரப் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது, முன்கூட்டியே என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏன் உருவானது என்பதற்கான தரவுகளுடன் கூடிய பதிலே அவசியம்.
அதிகாரிகள் கூறுவதன்படி, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடையவை; நிலக்கரி மின்சாரம் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. தேவைக்கேற்ப உண்மையில் வாங்கப்படும் மின்சாரத்திற்கே கட்டணம் செலுத்தப்படும் என்றும், மின்சாரம் வாங்கப்படாத நிலையில் நிலையான கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது மட்டுமல்லாமல், அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் செலவுச் சுமையையும் அரசு விளக்க வேண்டும். மின்தேவை கணிப்புகள், கொள்முதல் ஒப்பந்தங்கள், விலை வேறுபாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து வெளிப்படைத்தன்மை அவசியம். காரணங்களைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, தட்டுப்பாட்டைத் தடுக்க என்ன செய்யப்பட்டது என்பதே மக்களுக்குத் தேவையான பதிலாகும்.







