என் தமிழ்

மலாக்கா ம.இ.கா. 80-ஆவது மாநாட்டைத் தொடக்கி வைத்தார் டத்தோஸ்ரீ எம். சரவணன்

மலாக்கா, 12 அக்டோபர் 2026 : மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா.) தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சனாசியின் சார்பில், கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மலாக்கா மாநில ம.இ.கா.வின் 80-ஆவது மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட ம.இ.கா., மலேசிய இந்தியர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்ட டத்தோஸ்ரீ எம். சரவணன், கட்சியின் தேசிய அளவிலான முடிவுகள், நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு மாநிலம், தொகுதி, கிளை என அனைத்து நிலைகளிலும் உள்ள உறுப்பினர்கள் ஆதரவளித்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

மலாக்கா மாநில மாநாட்டில் மூத்த உறுப்பினர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றது, கட்சியின் மீதான அவர்களின் நீண்டகாலப் பற்றுதலை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ள கட்சியின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கும், அனைத்து நிலைகளிலும் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் மாநாடு முக்கியத் தளமாக அமையும் என்றார்.

கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒற்றுமையை வலுப்படுத்தி, குழு ஒருங்கிணைப்பையும் கூட்டுப் பணியையும் மேம்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலில், சமூக ஊடகங்களைத் தகவல் பரிமாற்றம், செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல் மற்றும் சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான முக்கியக் கருவியாக ஒவ்வொரு உறுப்பினரும் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

Scroll to Top