என் தமிழ்

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு : ஆசிய நாணயங்களுக்கு எதிராக உயர்வு

கோலாலம்பூர், 05 அக்டோபர் 2026 : மலேசிய ரிங்கிட் இன்று பெரும்பாலான ஆசியான் நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. எனினும், அமெரிக்க டாலருக்கு எதிராக சற்று சரிவைச் சந்தித்தது. மாலை 6 மணியளவில், ரிங்கிட் 4.0845/0890 என்ற நிலையில் வர்த்தகமானது. கடந்த வெள்ளிக்கிழமை அது 4.0820/0870 என்ற நிலையில் இருந்தது.

ஐரோப்பிய நாடுகளின் நிதிநிலை மற்றும் அரசியல் சூழல் தொடர்பான கவலைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும், இதனால் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் Bank Muamalat Malaysia Bhd தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அஃப்சானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாணயமான யூரோ, ஸ்பெயின் நவம்பர் 29-ஆம் தேதி திடீர் தேர்தலை நடத்தவுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, திங்களன்று 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்ததாக அவர் கூறினார்.

இதனிடையே, ரிங்கிட் உலகின் முக்கிய நாணயங்களுக்கு எதிராக கலவையான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. யூரோவுக்கு எதிராக ரிங்கிட் 4.5775/5825 ஆக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இது 4.5927/5983 ஆக இருந்தது. ஜப்பானிய யென்னுக்கு எதிராகவும் ரிங்கிட் 2.5858/5886 ஆக வலுப்பெற்றது. முன்னதாக அது 2.5906/5941 ஆக இருந்தது. அதேவேளை, பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக ரிங்கிட் 5.4022/4081 ஆக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இது 5.3927/3993 ஆக இருந்தது.

ஆசியான் நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் பெரும்பாலும் வலுப்பெற்றது. சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.1905/1943 ஆகவும், தாய்லாந்து பாட் நாணயத்திற்கு எதிராக 12.1234/1411 ஆகவும் உயர்ந்தது.

இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராகவும் ரிங்கிட் 227.9/228.3 ஆக உயர்ந்தது. அதேவேளை, பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 6.52/6.53 என்ற நிலையில் பெரிய மாற்றமின்றி நிலைத்தது.

Scroll to Top