என் தமிழ்

AI வளர்ச்சியுடன் ஆபத்துகளை நிர்வகிக்கும் திறனும் இணைந்து முன்னேற வேண்டும் : கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், 05 அக்டோபர் 2026 : மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முறையாக நிர்வகிக்கும் நடவடிக்கைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று டிஜிட்டல் அமைச்சரான கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ விகாரா டாக்டர் கு அப்துல் ரஹ்மான் கு இஸ்மாயில் ஆகியோர் AI வளர்ச்சி மற்றும் அதன் மேற்பார்வை தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கோபிந்த் சிங் டியோ இதனைத் தெரிவித்தார்.

தேசிய AI செயல்திட்டம் 2026–2030 (AI 2030), பொறுப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய AI வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை முக்கிய அடிப்படை அம்சங்களாகக் கருதப்படுகின்றன. இதன் மூலம் உற்பத்தித்திறன், திறன் மேம்பாடு மற்றும் நாட்டின் பொருளாதாரப் போட்டித்திறனை அதிகரிப்பதே நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மலேசிய AI பாதுகாப்பு நிறுவனத்தை (Malaysia AI Safety Institute) அமைப்பதன் மூலம், பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளில் AI மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கான தெளிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட மேற்பார்வை முறையை உருவாக்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

இந்த அமைப்பு AI ஆளுமை தொடர்பான அம்சங்களில் குறிப்பாக கவனம் செலுத்தும். இதில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குதல், ஆபத்து மதிப்பீடு மற்றும் சம்பவங்கள் தொடர்பான தகவல் பதிவு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது உதவும் என அவர் தெரிவித்தார்.

AI ஆளுமை சட்டமூலம் (AI Governance Bill) 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

மலேசியாவில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் சூழலியலை உருவாக்கும் நடவடிக்கைகளில், பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், AI பயன்பாட்டுடன் தொடர்புடைய ஆபத்துகள் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top