கோலாலம்பூர், 03 அக்டோபர் 2026 : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் அமைச்சருமான தான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு நூல் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) பிற்பகல் 2 மணிக்கு செந்துல் செட்டியார்கள் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் இரண்டாவது கட்டமாக நடைபெறும் இந்நிகழ்வில், பிரமுகர்களின் சிறப்புரைகளுடன் தான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் வாழ்க்கை, அனுபவங்கள் மற்றும் சாதனைகளைப் பதிவு செய்யும் இரு சிறப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
இரா. முத்தரசன் எழுதிய ‘தான்ஸ்ரீ மாணிக்கவாசகம்: நினைவுகள்-அனுபவங்கள்-சாதனைகள்’ என்ற தமிழ் நூலும், ‘Tan Sri Manickavasagam: Memories-Reflections-Achievement’ என்ற ஆங்கில நூலும் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையில் ஒருசேர வெளியிடப்படவுள்ளன.

இந்நிகழ்வில் தான்ஸ்ரீ க. குமரன், தான்ஸ்ரீ டி. மாரிமுத்து, டத்தோ வீ. நடராஜன், டத்தோ ஈஸ்வர் ஆதி. நாகப்பன், பெரு. அ. தமிழ்மணி, ரமணி மாணிக்கவாசகம் ஆகியோர் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் குறித்த சிறப்புரைகளை வழங்கவுள்ளனர். நூலாசிரியர் இரா. முத்தரசன் ஏற்புரையாற்ற, டத்தோஸ்ரீ சரவணன் தலைமையுரையாற்றி நூல்களை வெளியிடவுள்ளார்.
நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு அம்சமாக, தான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் 15 நிமிட காணொலி 3 பாகங்களாகத் திரையிடப்படவுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா, தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் குறித்து தெரிவித்த கருத்துகளும் காணொலி வடிவில் இடம்பெறவுள்ளன.
1926-ஆம் ஆண்டு பிறந்த தான்ஸ்ரீ மாணிக்கவாசகம், 1959 முதல் கிள்ளான்-போர்ட் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும், 1961 முதல் 1964 வரை தொழிலாளர் துணையமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 1964 முதல் 1979 வரை தொழிலாளர், தொடர்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
1973-ஆம் ஆண்டு மஇகாவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற தான்ஸ்ரீ மாணிக்கவாசகம், ஆறு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்த காலத்தில் இந்திய சமூகத்தின் நலன் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்.
நேசா கூட்டுறவுக் கழகம், மஇகா யூனிட் டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இந்தியர் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன், இன்றைய எம்.ஐ.இ.டி. அமைப்புக்கு முன்னோடியாகக் கருதப்படும் மஇகா கல்வி நிதியையும் தொடங்கினார். இந்தியர்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சிக் கல்வியைப் பெறுவதற்காக ஐடிஎன் கல்லூரியை விலைக்கு வாங்கிய நிலையில், அது பின்னர் டேஃப் கல்லூரியாக வளர்ச்சியடைந்தது.
அமைச்சராக இருந்த காலத்திலும் நாட்டின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார். சொக்சோ திட்டம் மற்றும் மாஸ் விமான நிறுவனத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளிலும் அவர் பங்காற்றினார்.
தான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் நூற்றாண்டு விழாவுக்கான சிறப்பு ஏற்பாட்டுக் குழு தான்ஸ்ரீ க. குமரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. டத்தோஸ்ரீ எம். சரவணன் துணைத் தலைவராகவும், தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், அமரர் டத்தோ காந்தன், மாணிக்கவாசகத்தின் புதல்வர் ரமணி மாணிக்கவாசகம் ஆகியோர் ஆலோசகர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி போஸ் மலேசியா பெர்ஹாட் வெளியிட்ட சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். தான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம், தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் குறித்த நினைவுச் சொற்பொழிவையும் நிகழ்த்தினார்.
அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும் நூல் வெளியீட்டு விழா தேநீர் விருந்துபசரிப்புடன் நிறைவுபெறவுள்ளது. நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு: 012-2326967 (இரா. முத்தரசன்)







