என் தமிழ்

MAHA 2026 : விவசாயத் துறையில் RM3.27 பில்லியன் மதிப்பில் 17 ஒப்பந்தங்கள்

சிலாங்கூர், 05 செப்டம்பர் 2026 : மலேசிய விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சி (MAHA) 2026, தனது எட்டாவது நாளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இதுவரை மொத்தம் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) பரிமாறப்பட்டுள்ளதுடன், அவற்றின் மொத்த மதிப்பு RM3.27 பில்லியனாகும் என விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (KPKM) தெரிவித்துள்ளது.

இதில் முக்கிய ஒத்துழைப்பாக, தேசிய விவசாயிகள் அமைப்பு (NAFAS), Guizhou Phosphate Chemical (GPC) Group மற்றும் Jiangsu Chemical Design Institute Co. Ltd. (CDIJS) ஆகியவற்றுக்கு இடையே RM1.5 பில்லியன் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

இந்த ஒத்துழைப்பு மலேசியாவில் ஒருங்கிணைந்த உரத் தொழில்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூலப்பொருள் பதப்படுத்துதல், தொழில்நுட்பப் பரிமாற்றம், உள்நாட்டு திறன் மேம்பாடு மற்றும் உரத் தொழிலின் அடுத்தகட்ட வாய்ப்புகளை ஆராய்தல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன.

மேலும், மலேசியாவின் உயர்தர புதிய துரியான் பழங்களுக்கு சீனச் சந்தையில் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. Top Fruits Sdn. Bhd., JL Food Industries Sdn. Bhd., Golden Fresh Durian Sdn. Bhd. மற்றும் Phg Ever Fresh Food Sdn. Bhd. ஆகிய நான்கு மலேசிய நிறுவனங்கள் சீனாவின் வர்த்தகப் பங்காளிகளுடன் இந்த ஒத்துழைப்பில் இணைந்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ‘Jiangnan Selected’ என்ற வர்த்தகப் பெயரில் மலேசிய உயர்தர துரியான் பழங்களை முழுப் பழமாக மூன்று ஆண்டுகளுக்கு விநியோகித்து விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் மலேசிய துரியானின் சர்வதேச சந்தை அணுகல் மற்றும் விநியோக வலையமைப்பு மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MAHA 2026 கண்காட்சி விவசாயப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விளம்பரத்திற்கான தளமாக மட்டுமின்றி, உள்நாட்டு தொழில்துறையினரை சர்வதேச வர்த்தகப் பங்காளிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் முக்கிய தளமாகவும் விளங்குகிறது. இதன் மூலம் விவசாயம் மற்றும் வேளாண் உணவுத் துறையில் மலேசியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் மேலும் வலுப்பெறுகின்றன.

Scroll to Top