என் தமிழ்

செயற்கை நுண்ணறிவால் முதியோரின் நினைவுகளை உயிர்ப்பித்த UiTM மாணவர்கள்

சிலாங்கூர், 05 ஜூலை 2026 : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முதியோரின் வாழ்க்கை நினைவுகளை மீட்டெடுத்து அவற்றை படங்களாக உருவாக்கும் சிறப்பு நினைவாற்றல் சிகிச்சை (Creative Memory Therapy) திட்டத்தை, ஷா ஆலம் தொழில்நுட்ப மாரா பல்கலைக்கழகத்தின் (UiTM) மாணவர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

Heart2Hope: Spreading Care, Inspiring Hope என்ற சமூகப் பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக, செமென்யிஹில் உள்ள மஹ்மூதா முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது, முதியோர் பகிர்ந்துகொண்ட வாழ்வின் இனிய நினைவுகளை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் படங்களாக மாற்றி, அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இதுதவிர, நினைவாற்றலை மேம்படுத்தும் விளையாட்டுகள், எளிய உடற்பயிற்சி, வளாகத்தை சுத்தம் செய்யும் தன்னார்வப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த முயற்சி, முதியோரின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், ஆரோக்கியமான முதுமை வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் பெனோ முஸ்தபா கூறுகையில், 2030-ஆம் ஆண்டுக்குள் மலேசியா முதியோர் அதிகம் வாழும் நாடாக மாறும் நிலையில், முதியோரின் மனநலம் மற்றும் சமூக நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், அதற்காகவே இந்த AI அடிப்படையிலான நினைவாற்றல் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், முதியோருடன் நேரம் செலவிட்டது தங்களுக்கு மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்திய அனுபவமாக அமைந்ததாகக் கூறினர். அதேவேளையில், முதியோர் இல்ல வாசிகளும், தங்களது பழைய நினைவுகளை மீண்டும் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடவும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில், முதியோர் இல்லத்திற்கு பண உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

Scroll to Top