கோலாலம்பூர், 04 ஜூலை 2026 : ஆசிய நாணயங்கள் மீதான நேர்மறையான சந்தை உணர்வு மற்றும் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய பொருளாதார தரவுகளின் தாக்கத்தால், மலேசிய ரிங்கிட் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவடைந்தது.
வர்த்தக நிறைவில், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 4.0690/0735 ரிங்கிட் ஆக பதிவானது. முந்தைய நாள் இது 4.0780/0830 ரிங்கிட் ஆக இருந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரிங்கிட் 4.0600 என்ற அளவுக்கு வலுப்பெற்றாலும், நண்பகலில் சற்று சரிந்து, பின்னர் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
பேங்க் முஅமலாத் மலேசியாவின் தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அப்சானிசாம் அப்துல் ரஷித் கூறுகையில், அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு (Non-Farm Payroll – NFP) தரவுகள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால், அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) உடனடியாக வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு குறைந்துள்ளதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதுவே ஆசிய நாணயங்களின் மதிப்பை உயர்த்திய முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றார்.
மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில், ரிங்கிட் பிரிட்டிஷ் பவுண்டு மற்றும் ஜப்பான் யெனுக்கு எதிராக வலுவடைந்தது. இருப்பினும், யூரோவுக்கு எதிராக சற்று மதிப்பிழந்தது. அதேவேளையில், பிராந்திய நாணயங்களில் இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக ரிங்கிட் வலுப்பெற்ற நிலையில், சிங்கப்பூர் டாலர் மற்றும் தாய்லாந்து பாட் நாணயங்களுக்கு எதிராக சற்று சரிவைக் கண்டது.






