என் தமிழ்

ITU கவுன்சில் உறுப்பினர் பதவி : இந்தியா தனது வேட்புமனுவை அறிமுகப்படுத்தியது

கோலாலம்பூர், 18 ஜூன் 2026 : இந்திய உயர் ஆணையம் மற்றும் இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை இணைந்து, ஆசிய பசிபிக் தொலைத்தொடர்பு அமைப்பு (APT) மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) உறுப்பினர்களுக்காக கோலாலம்பூரில் சிறப்பு கலந்துரையாடல் மற்றும் வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்வில், 2027–2030 காலகட்டத்திற்கான ITU கவுன்சிலில் உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் வேட்புமனுவும், ITU வானொலித் தொடர்புப் பணியகத்தின் (BR) இயக்குநர் பதவிக்கான டாக்டர் ரேவதி மன்னேபள்ளியின் வேட்புமனுவும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா, காணொளி வாயிலாக அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ITU கவுன்சிலுக்கான இந்தியாவின் வேட்புமனுவையும், டாக்டர் ரேவதி மன்னேபள்ளியின் தகுதிகளையும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் உரையாற்றிய இந்திய இரயில்வேயின் துணை தலைமை இயக்குநரும், இந்தியாவின் ITU ஒருங்கிணைப்பாளருமான முகேஷ் குமார், ITU உடனான இந்தியாவின் நீண்டகால ஒத்துழைப்பு, சர்வதேச தொலைத்தொடர்பு துறைக்கான அதன் பங்களிப்பு மற்றும் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்.

இந்திய உயர் ஆணையத்தின் ஆலோசகர் நவீன் கே. ராமகிருஷ்ணா தனது வரவேற்புரையில், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத் துறைகளில் இந்தியா பெற்றுள்ள முன்னேற்றங்கள், உலகளாவிய டிஜிட்டல் வளர்ச்சியில் அதன் தலைமைத்துவம் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்படும் அதன் திறனை வலியுறுத்தினார்.

இதனிடையே, டாக்டர் ரேவதி மன்னேபள்ளி தனது தொலைநோக்குப் பார்வை அறிக்கையை வழங்கியபோது, உலகளாவிய டிஜிட்டல் மாற்றம், புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குமுறை துறைகளில் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால அனுபவம் கொண்ட அவர், வளங்களை சமமாக நிர்வகிக்கும் கொள்கையை முன்னிறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு, உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதுடன், ITU அமைப்பில் அதன் பங்கை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.

Scroll to Top