என் தமிழ்

எரிசக்தி, உள்ளூர் நாணய வர்த்தகம் குறித்து ஆலோசனை: அன்வர் இப்ராஹிம் – விளாடிமிர் புடின் சந்திப்பு

18 ஜூன் 2026 : மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கசானில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலக அறிக்கையில், எரிசக்தி மற்றும் பெட்ரோலிய விநியோகத்தில் நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதற்கான ரஷ்யாவின் உறுதிப்பாட்டை மலேசியா வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். குறிப்பாக, உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் புதிய பொருளாதார கூட்டாண்மைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், புதிய தொழில்நுட்பங்கள், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI), நவீன வேளாண்மை மற்றும் மருந்துத் தயாரிப்பு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு, மலேசியா மற்றும் ரஷ்யா இடையிலான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Scroll to Top