என் தமிழ்

DAP குறித்து ஓன் ஹபிஸ் கருத்து : “சொல்லும் செயலும் முரண்படுகிறது” என மாண்டீப் சிங் விமர்சனம்

கோலாலம்பூர், 08 ஜூன் 2026 : முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ ஓன் ஹபிஸ் காசி, “DAP கட்சியுடன் ஒரே மேசையில் அமர்வதைவிட முதலமைச்சர் பதவியை ஏற்காமல் இருப்பதையே விரும்புகிறேன்” என அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு DAP தேசியத் தலைமைத்துவத்தின் சார்பில் கடும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அமைச்சரின் சிறப்பு அதிகாரியும் DAP தேசியத் தலைவருமான மாண்டீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆகஸ்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஓன் ஹபிஸ், DAP தேசியத் தலைவருடன் ஒரே மேசையில் அமர்ந்து கலந்துரையாடியதையும், கைகுலுக்கி வாழ்த்துப் பரிமாறிக் கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், MITEC-இல் நடைபெற்ற ஆசியான் செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் போது DAP தேசியத் தலைவருக்கு நினைவுப் பரிசு வழங்கிய புகைப்படங்களையும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.

“இந்தப் புகைப்படங்களா உண்மை, அல்லது தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசியல் அறிக்கையா உண்மை?” என்று கேள்வி எழுப்பிய மாண்டீப் சிங், தேர்தல் காலங்களில் அரசியல் ஆதாயத்திற்காக DAP-யை எதிர்மறையாக சித்தரிக்கும் பழக்கம் தொடரக்கூடாது என வலியுறுத்தினார்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், ஒருவரின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு காணப்படுவது அவரது தலைமைத்துவ நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய அரசியல் வரலாற்றில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் DAP-யுடன் அனைவரும் உடன்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்காளர்களிடையே அச்சத்தை உருவாக்கும் அரசியல் கருவியாக அந்தக் கட்சியை பயன்படுத்துவது நியாயமற்றது என்றும் மாண்டீப் சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Scroll to Top