துபாய், 30 மார்ச் 2026 : ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், இரு தரப்பினருக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் தளங்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதன் அடுத்த கட்டமாக, ஈரானில் தரைவழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சுமார் 3,500 கூடுதல் வீரர்கள் வளைகுடா பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் சுமார் 1,000 பேர் விமானத்தில் இருந்து குதித்து முக்கிய பகுதிகளை விரைவாக கைப்பற்றும் பயிற்சி பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படைகள் ஈரானை ஒட்டிய பகுதிகளில் நிலைபெற்றுள்ளதாகவும், தரைவழி தாக்குதல் தொடங்கப்பட்டால் அதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்க படைகள் ஈரான் நிலப்பரப்பில் நுழைந்தால், அதற்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.





