என் தமிழ்

ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து: செனகலுக்கு பதிலாக மொராக்கோ சாம்பியன் என அறிவிப்பு

கேப்டவுன், 19 மார்ச் 2026 : நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த ஜனவரி 18-ந்தேதி இரவு மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல் அணி கூடுதல் நேரத்தில்கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

முன்னதாக கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவரிடம் வாக்குவாதம் செய்த செனகல் வீரர்கள் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரில் மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குழப்பத்தால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது .

ஆனால் ஆட்டத்தின் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக கண்டித்தது.

இந்த நிலையில் வீரர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் மேல் முறையீட்டு வாரியம், இறுதிப்போட்டியில் விதிமுறையை மீறிய செனகல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது. அத்துடன் சாம்பியன் பட்டத்துக்கான கோப்பையை இறுதிப்போட்டியில் தோற்ற மொராக்கோ அணிக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மொராக்கோ அணி 1976-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்த கோப்பையை பெறுகிறது.

இந்த தீர்ப்பால் கடும் அதிருப்தி அடைந்து இருக்கும் செனகல் அணி நிர் வாகம் சர்ச்சைக்குரிய கோப்பை பறிப்பு உத்தரவை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

Scroll to Top