சிலிம் ரிவர், 19 மார்ச் 2026 : தமது தந்தையின் சமூகச் சேவை மரபை முன்னிறுத்தும் வகையில், சிலிம் ரிவர் பகுதியைச் சேர்ந்த நவனீத் பிரபாகரன், நோன்புப் பெருநாளை முன்னிட்டு உதவி தேவைப்படும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து பாராட்டைப் பெற்றுள்ளார்.
அவர் தலைமையில் நடைபெற்ற இந்த நலத்திட்டத்தின் மூலம், 30 பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், 150 பேருக்கு நோன்புக் கஞ்சிப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
கிளினிக் மெடிக் கியூ (Klinik Medik Q) நிறுவனத்தின் உரிமையாளரான நவனீத், “நோன்புப் பெருநாள் மகிழ்ச்சியை அனைவரும் சமமாக அனுபவிக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன் இந்த உதவித் திட்டத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஃபெல்டா துரோலக் குடியேற்றவாசியும், சமூக சேவையில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டவருமான தனது தந்தை ந. பிரபாகரன் (75) தான் இந்தப் பணிகளுக்குத் தூண்டுகோலாக உள்ளார் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
“நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் செல்வம் குறையாது; மாறாக அது மனநிறைவும் இறைவனின் அருளும் அளிக்கும்,” என்ற நம்பிக்கையையும் அவர் பகிர்ந்தார்.
சிறுவயதிலிருந்தே பன்முகத்தன்மை கொண்ட சமூக சூழலில் வளர்ந்தவர் என்ற முறையில், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் இன, மத நல்லிணக்கம் முக்கியம் என அவர் வலியுறுத்தினார். நவீன சமூகத்தில் யாரும் புறக்கணிக்கப்பட்டதாக உணராத சூழலை உருவாக்குவது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
முவாலிம் மாவட்ட இஸ்லாமிய சமய அலுவலகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு, இந்த உதவிகள் இரண்டு நாட்களாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் டாக்டர் ம. லெவினியாவும் கிளினிக் மெடிக் கியூ ஊழியர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
சவால்கள் நிறைந்த இன்றைய காலத்தில் மனிதநேயம் மட்டுமே சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்தும் என்பதில் உறுதியான நவனீத், எதிர்காலத்திலும் தனது தந்தையின் வழியில் சமூகப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று உறுதியளித்தார்.






