என் தமிழ்

போரால் பாதிக்கப்பட்ட ஈரானுக்கு இந்தியா மருத்துவ உதவி

புதுடெல்லி, 18 மார்ச் 2026 : ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியாக கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள் மற்றும் மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் உயிரிழந்ததாக ஈரான் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவங்களால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து ஈரான் நடத்திய பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அவற்றின் படைத் தளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளன. வளைகுடா நாடுகளில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரானுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஈரானின் செம்பிறை சங்கத்திற்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவிக்காக இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. இந்திய மக்களின் ஆதரவுடன் அனுப்பப்பட்ட முதல் கட்ட மருத்துவ நிவாரணப் பொருட்கள் ஈரானின் செம்பிறை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இந்திய மக்களின் இரக்க உணர்வுக்கு உண்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

ஈரானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் இந்தியா வழங்கிய இந்த உதவி, கடும் நெருக்கடியின் போது மனிதாபிமான ஆதரவாக அமைந்துள்ளது.

Scroll to Top