என் தமிழ்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 80,886 டன் கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்த இந்திய கப்பல்

புதுடெல்லி, 18 மார்ச் 2026 : மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ப் பதற்றத்திற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியுடன் கூடிய 4-வது எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக இந்தியாவை வந்தடைந்துள்ளது.

மேற்காசிய மோதலின் காரணமாக ஈரானை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்லுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் பயணம் செய்யும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் அபாயம் நிலவி வருகிறது.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த இந்தியக் கொடியுடன் கூடிய இரண்டு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியது. அந்த இரண்டு கப்பல்களும் நேற்று முன்தினம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தன.

அதைத் தொடர்ந்து, “நந்தா தேவி” என்ற 3-வது இந்திய கப்பல் நேற்று அதிகாலையில் குஜராத்தை சென்றடைந்தது.

இந்நிலையில், “ஜக் லாட்கி” என்ற கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சுமார் 80,886 டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு இன்று இந்தியாவை வந்தடைந்துள்ளது. இதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து வந்த 4-வது இந்திய கப்பல் இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top