என் தமிழ்

ஆப்கானிஸ்தான் வான்தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுவதும் டிரோன்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்துள்ளது

காபூல், 28 பிப்ரவரி 2026 : பாகிஸ்தானுக்கு அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்கள், மசூதிகள், ராணுவ தளங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தலீபானின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலீபான் (TTP) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கூறப்படும் முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல்களை மேற்கொண்டது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. கடந்த வாரம், ஆப்கான் எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

அந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 55 பேர் உயிரிழந்ததுடன், 12-க்கும் மேற்பட்ட ராணுவ முகாம்கள் கைப்பற்றப்பட்டதாக ஆப்கான் அரசு கூறியுள்ளது. மேலும், 23 பேரின் உடல்கள் தங்களிடம் இருப்பதாக ஆப்கான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரிவித்தார்.

ஆனால், இந்த தகவல்களை பாகிஸ்தான் மறுத்துள்ளது. தங்கள் தரப்பில் 2 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாகவும், பதிலடி தாக்குதலில் 133 ஆப்கான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 2,611 கிலோமீட்டர் நீளமுடைய ‘டியூரண்ட் லைன்’ எல்லையை ஆப்கானிஸ்தான் இதுவரை அங்கீகரிக்கவில்லை. மேலும், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தஞ்சம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்ட, ஆப்கான் இறையாண்மையில் பாகிஸ்தான் தலையிடுவதாக ஆப்கானிஸ்தானும் பதிலடி குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறது.

இந்நிலையில், கத்தாரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால், இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் நிலவுகிறது.

இதன் பின்னணியில், எல்லைப் பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் அனைத்து டிரோன் நடவடிக்கைகளுக்கும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. வணிக மற்றும் தனியார் டிரோன்கள் அனைத்திற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெளிப்படையான போர் நிலை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்ட பதிவில், “பாகிஸ்தானின் பொறுமைக்கு எல்லை கடந்துவிட்டது. தற்போது நடைபெறுவது பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையிலான வெளிப்படையான போர்” என்று தெரிவித்துள்ளார்.

Scroll to Top