புதுச்சேரி[இந்தியா], 09 ஜனவரி 2026 : சென்னையில் நடைபெற இருக்கும் அயலகத் தமிழர் விழா 2026 இல் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள மலேசியத் தமிழர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய 24 பேர் கொண்ட குழுவினர் 09 ஜனவரி 2026 அன்று மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு N. ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
மலேசியத் தமிழர் சங்க அறங்காவலர் திரு. தங்கவேலு, தேசியத் தலைவர் திரு. பரமசிவம் மருதை, தேசியத் துணைத் தலைவர் திரு. செல்வகுமரன், தேசிய உதவித் தலைவர் திரு. ஆறுமுகம் மற்றும் தேசியப் பொருளாளர் திரு. பத்துமலை இராமலிங்கம் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி மலர் கொத்து வழங்கி மரியாதை செலுத்தி தங்கள் அன்பை தெரியப்படுத்தினர். மேலும் பத்துமலை முருகனின் திருவுருவச் சிலை ஒன்றினை முதலமைச்சர் அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கினர். இந்த சந்திப்பின் போது வந்திருந்த குழுவினர் அனைவருடனும் புதுச்சேரி முதலமைச்சர் மிகவும் பணிவன்புடன் உரையாடி அனவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது மலேசிய தமிழர் சங்க நிர்வாகிகள் புதுச்சேரி முதலமைச்சரிடம் மூன்று கோரிக்கைகளை வைத்தனர். மலேசிய தமிழ் மாணவர்கள் ஐவர் ஆண்டுதோறும் புதுச்சேரியில் உபகாரச் சம்பளத்துடன் கல்வி பயில ஒரு புரிந்துணர்விற்கு ஒப்பந்தம் செய்தல், எதிர்வருகின்ற 2026 மே மாதம் கோலாலம்பூரில் நடைபெற இருக்கும் மலேசிய தமிழர் சங்க வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க அழைப்பு மற்றும் இந்த வெள்ளி விழாவில் பங்கேற்க புதுச்சேரி அரசு சார்பில் ஒரு கலை கலாச்சார குழுவை மலேசியா அனுப்பி வைத்தல் ஆகிய மூன்று கோரிக்கைகளை மலேசிய தமிழர் சங்க நிர்வாகிகள் புதுச்சேரி முதலமைச்சரிடன் தெரிவித்தனர். முதலமைச்சரும் அந்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
மலேசிய தமிழர் சங்க குழுவினருக்கு இன்சுவை மதிய உணவு ஏற்பாடு செய்து உணவருந்திவிட்டு செல்ல வலியுறுத்தி தனது விருந்தோம்பல் பண்பை புதுச்சேரி முதலமைச்சர் வெளிப்படுத்தினார். குழுவினரும் அவருக்கும் தங்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது என் தமிழ் இணைய ஊடக நிர்வாக இயக்குநர் திருமதி ராணி லிங்கம் மற்றும் என் தமிழ் இணைய ஊடக இந்திய பிரிவு தலைவர் திரு. செந்தில் நாதன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் முதலமைச்சருடனான இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த என் தமிழ் ஊடகத்தின் இந்திய நிர்வாகி திரு செந்தில் நாதன் அவர்களுக்கும், உதவி புரிந்த முதலமைச்சரின் தனிச் செயலாளர் முனைவர் திரு. அமுதன் அவர்களுக்கும் வழிகாட்டிய திரு ஆதவன் அவர்களுக்கும் மலேசிய தமிழர் சங்க நிர்வாகிகள் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
முதலமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு புதுச்சேரியில் உள்ள மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்திற்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு இல்லத்திற்கும் மலேசியத் தமிழர் சங்கத்தினர் வருகை புரிந்தனர்.


















