கோலாலம்பூர், 16 டிசம்பர் 2025 : மலேசியாவின் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டதற்காக, மதிப்பிற்குரிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் தனது மனமார்ந்த நன்றியையும் உயர்ந்த பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நியமனம், நாட்டின் மனிதவள மேம்பாட்டு செயல்திட்டங்களை முழுமையாகவும், அனைவரையும் உள்ளடக்கும் வகையிலும், போட்டித்திறன் கொண்டதாகவும் வலுப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பாகும். மலேசியா மடானி என்ற தேசியக் கோட்பாட்டின் இலக்குகளுக்கு இணங்க, இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றப்போவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் இந்திய சமூகத்தின் சார்பாகவும், இந்த உயரிய பொறுப்பையும் நம்பிக்கையையும் வழங்கிய பிரதமருக்கு அவர் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
பதவியேற்பு பிரமானம் முடிவடைந்த பின்னர், மனிதவள அமைச்சகத்தின் மூத்த தலைமையுடன் விரைவில் சந்தித்து ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளதாகவும், நிர்வாகத் தொடர்ச்சியும் கொள்கை அமலாக்கமும் உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
மலேசிய மக்களின் எதிர்பார்ப்புகளை, குறிப்பாக இந்திய சமூகத்தின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் வகையில், தனது கடமைகளையும் பொறுப்புகளையும் முழு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார். மலேசியா மடானி கனவை நடைமுறையில் வலுப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனுடன், உருவாக்கத் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்திற்கும் அதன் அனைத்து பணியாளர்களுக்கும் அவர் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
கடந்த இரண்டாண்டுகளாக அந்த அமைச்சகத்தில் அவர் பணியாற்றிய போது, இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுக்க அனைத்து துறைகளும் வழங்கிய வலுவான ஒத்துழைப்புக்கு அவர் சிறப்பு நன்றியை தெரிவித்தார்.





