ஜோகூர், 26 ஜூன் 2025 : டிஜிட்டல் மீடியா கிளப்பின் ஏற்பாட்டில், ராக் ஸ்டார் மீடியா தயாரிப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு, 24, 25 ஜூன் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் 14 ஊடகங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஊடக உலகின் முக்கியக் கூறுகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தொழில்துறையின் முக்கிய தலைவர்கள் டத்தோ ஶ்ரீ டாக்டர் ராஜசேகரன், டத்தின் வசந்தி, டத்தோ டாக்டர் கே. புருஷோத்தமன், மற்றும் சிங்கப்பூரின் கலைத்திலகம் திரு தேவதாஸ் ஆகியோர் தலைமையேற்று சிறப்புரையாற்றினர்.
டாக்டர் கே. புருஷோத்தமன் அவர்கள் தனது உரையில்,
“ஊடகம் என்பது ஒரு பெரும் கடலைப்போல்; அதில் பயணிக்க ஒவ்வொருவரும் கடின உழைப்பை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில், ஊடகவியலாளர்கள் தங்களை அந்த முன்னேற்றத்திற்கு ஏற்ப நவீனமாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்,”
எனக் கூறி ஊடக உலகில் நிலைத்த வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு வருகையாளராக டாக்டர் கவிமாறன் அவர்கள் கலந்து கொண்டு, ஊடகங்களின் முக்கியத்துவம், ஊடகவியலாளர்களின் சமூக பங்கு, மற்றும் “ஊடகம் என்றால் என்ன? அதன் சமகால பங்களிப்பு என்ன?” என்பன குறித்து மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் விளக்கினார்.
ஊடகவியலாளர்கள், இந்த சந்திப்பு பயனளித்ததாகவும், எதிர்கால கூட்டுச் செயல்பாடுகளுக்கு இது ஒரு தொடக்கமாக அமைந்ததாகவும் கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



























