ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை; விளக்குகின்றார் வழக்கறிஞர் அம்பிகா

ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை; விளக்குகின்றார் வழக்கறிஞர் அம்பிகா

கோலாலம்பூர், 21/04/2025 : ஒரு தனிமனிதனின் உரிமை, கடமை மற்றும் பொறுப்புகளைத் தெளிவாக விளக்கி சட்ட ரீதியிலான பாதுகாப்புகளை வழங்குவதில் ஒப்பந்தங்கள் முதன்மை வகிக்கின்றது.

ஒப்பந்தங்கள் செய்துகொள்வதன் மூலம் அதில் பொறுப்பேற்கும் இரு தரப்பினருக்கும் இடையில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய குழப்பங்கள் சிக்கல்கள் களையப்படுவதோடு அது உறவுகள் மத்தியில் சிறந்த நம்பகத்தன்மையும் ஏற்படுத்தும்.

வணிகம், பணியாளர், வீடு, வாகனம், வாடகை போன்ற பல்வேறு ஒப்பந்தங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், அதில் கையெழுத்திட தவறுபவர்கள் சட்ட ரீதியில், எதிர்கொள்ளக் கூடிய சிக்கல்கள் குறித்து விளக்குகின்றார் வழக்கறிஞர் அம்பிகா இராஜேந்திரன்.

ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதன் மூலம் சட்டப்பூர்வ உடன்படிக்கைகளுக்கு உட்பட்டு ஒருவரின் உரிமைகள் பாதுகாகப்படுவதாக வழக்கறிஞர் அம்பிகா இராஜேந்திரன் கூறினார்.

“இப்பொழுது ஓர் ஒப்பந்தம் இருந்தது என்றால் நமக்கு மூன்று விஷயங்கள் கிடைக்கும். அதாவது, தெளிவு, அர்ப்பணிப்பு மற்றும் கடப்பாடு. நாம் இதை செய்யவில்லை என்றால், நாம் நினைக்கலாம் எதற்காக இவ்வளவு பணம் செலவழித்து, ஒரு வழக்கறிஞரைத் தேடி, அதற்கும் நேரம் செலவாகும் என்று நினைக்கலாம். ஆனால், செலவுகளைப் பற்றி யோசித்து பிறகு நாம் கஷ்டப்பட்டு வருத்தப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது”, என்றார் அவர்.

ஒப்பந்தத்தில் கோடிடப்பட்டுள்ள நிபந்தனைகள், அதன் விதிகளை மீறாமல் இருப்பதற்கும், அவ்வாறு மீறுபவர்களுக்கு சட்ட ரீதியிலான தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கவும் அது வகை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்தங்களைத் தயார் செய்யும் தரப்பினர்கள், ஏன், எங்கு, எப்படி, என்ன, எப்பொழுது, யார் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் அதனை தயார் செய்வதன் அவசியம் குறித்தும் அம்பிகா விளக்கினார்.

“ஆக, அதில் நீங்கள் முக்கியமான விஷயங்களைப் பார்த்தீர்கள் என்றால் ‘Skop Milestone and Payment’, அவை அனைத்தும் அந்த கேள்விகளுக்குள் அடங்கிவிடும். என்ன செய்ய வேண்டும், எவ்வளவு பணம் செலுத்த வேண்டும், எப்பொழுது செலுத்த வேண்டும், எப்படி செலுத்த வேண்டும். இரண்டு பக்கமும் அனைத்தும் தெளிவாகி விடும். அதுபோன்ற விவரங்கள் அல்லாத ஒப்பந்தங்களை நாம் கையெழுத்திட்டால் நான் முன்பு கூறியது போல நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்காது”, என்று அவர் கூறினார்.

இதனிடையே, தவறான புரிதல் மற்றும் தகவல்களைத் தவிர்க்க, ஒப்பந்தத்தின் அனைத்து நிபந்தனைகளையும் கவனமாகவும் தெளிவாக படிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அம்பிகா வலியுறுத்தினார்.

அதோடு, ஒப்பந்தத்தில் புரிந்துக் கொள்ள கடினமாக மற்றும் தெளிவாக குறிப்பிடாத எந்தவொரு பகுதி குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேள்வி எழுப்பி, சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது சிறந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

“நீங்கள் ஒப்பந்தம் கையெழுத்திட்டால், வெறுமனே கையெழுத்திடாமல் அதனை நன்கு படித்து பார்த்து கையெழுத்திட வேண்டும். ஏனென்றால், நீங்கள் என்ன கையெழுத்திடுகிறீர்களோ அதற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும்”, என்று அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் மற்றும் சட்ட ரீதியிலான அதன் தாக்கங்கள் குறித்து, இன்றைய சட்டம் தெளிவோம் அங்கத்திற்காக வழக்கறிஞர் அம்பிகா இராஜேந்திரன் பெர்னாமா செய்திகளிடம் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews