புத்ராஜெயா, 06/01/2025 : கனரக வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையை முழுமையாகக் கையாள போக்குவரத்து அமைச்சு சிறப்பு பணிக்குழு ஒன்றை தொடங்கவிருக்கிறது.
அந்தச் சிறப்பு பணிக்குழுவிற்கு போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ ஜனா சந்திரன் முனியன் தலைமையேற்கவிருப்பதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
“இந்தப் பணிக்குழு இனி ஆய்வை மேற்கொள்வதற்கு அல்ல. மாறாக, செயல்படுத்துவதற்கான பணிக்குழு ஆகும். நான் கே.எஸ்.யு-விற்கு முழு அதிகாரத்தை வழங்கி விட்டேன். இந்தப் பணிக்குழுவின் பணிகளை அவர் என்னிடம் நேரடியாகத் தெரிவிப்பார். இந்தப் பணிக்குழு சுமூகமாக செயல்படுவதையும், அது செயல்படுவதற்கான அதிகாரம் வழங்கப்படுவதையும் நான் உறுதிசெய்வேன். உடனடி எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை அவர் செயல்படுத்தலாம்,” என்றார் அவர்.
அதேவேளையில், சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே, அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம், தரை பொது போக்குவரத்து நிறுவனம், APAD மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், AADK ஆகிய அனைத்து தரப்பினரையும் உட்படுத்தி தமது அமைச்சு ஒருங்கிணைந்த மற்றும் தொடர் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று லோக் குறிப்பிட்டார்.
வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய கனரக வாகனமோட்டிகள் சாலை போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் விவரித்தார்.
இன்று, புத்ராஜெயாவில் போக்குவரத்து அமைச்சின் 2025 புத்தாண்டு உரைக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் லோக் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, கனரக வாகனங்களின் சுமையைத் தானியங்கி முறையில் கண்காணிக்க நிறுவப்பட்ட அதிவேக மற்றும் இயக்க எடை செயல்முறை ,HS-WIM இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் HS-WIM செயல்முறை நிறுவப்படும் 10 இடங்களைப் போக்குவரத்து அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
“HS-WIM மூலம் அமலாக்கத்தை உள்ளடக்கிய மாஸ்டர் பிளான், முக்கிய பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கு நோக்கில் உருவாக்கப்படும். இதை செயல்படுத்துவதிலிருந்து பின்வாங்க கூடாது என்று கடந்த வாரம் அறிவுறுத்தல்களை வழங்கினேன், ஏனெனில் கடந்த ஆண்டு நாங்கள் அதை சோதித்துவிட்டோம், எனவே அதனை இந்த ஆண்டில் அமல்படுத்த வேண்டும், ” என்றார் அவர்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.