கோலாலம்பூர், 04/10/2024 : நாட்டின் 100 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக, இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாட்டை, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
2023-ஆம் ஆண்டு மலேசிய கூட்டுறவு கொள்கை, DaKoM 2030-இன் கீழ் இந்திய கூட்டுறவுக் கழகங்களில் உள்ள சவால்களைக் கண்டறிவதுடன், அதன் எதிர்கால இலக்குகளைத் திட்டமிடுவதற்கு, இம்மாநாடு துணைப் புரியும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
”ஆக, நம்ப பாத்திங்கனா தொழில்முனைவோருக்கு ஒரு வகையில் உதவிகள் செய்திருக்கோம். எல்லாம் நாம் செய்யவில்லை. ஆனால், ஒன்று ஒன்றாக செய்து வருகிறோம். இப்போது கூட்டுறவு கழகங்களுக்கு இந்த முயற்சியை நாம் உருவாக்க இருக்கிறோம். ஆக, இந்த வாய்ப்பை நாம் கொடுக்கப் போகிறோம். எனவே, அனைத்து இந்தியர்களும் இதில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்”, என்று அவர் கூறினார்.
நாட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதில் 419-க்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் இந்தியர்களுக்குச் சொந்தமானது என்று டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.
”இன்றைக்கு நாம் பார்த்தோமானால் வெறும் 419 கூட்டுறவு கழகங்கள் மட்டுமே இந்தியர்களுக்கானதாக உள்ளது. 16 ஆயிரம் கூட்டுறவு கழகங்களில் நாம் வெறும் 500 மட்டுமே இந்தியர்களுக்கானதாக உருவாக்கியுள்ளனர். ஆக, இந்த நூறு ஆண்டில் 1922-யில் இருந்து இந்த மாதிரி ஒரு முயற்சியை இந்தியர்களுக்கு ஒருமுறை கூட செய்யவில்லை”, என்றார் அவர்.
இம்மாதம் அக்டோபர் 13-ஆம் தேதி,கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ரக்யாட் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் பல்வேறு கூட்டுறவுக் கழகங்களிலிருந்து 800-க்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவிற்கின்றனர்.
இன்று, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ரக்யாட் மண்டபத்தில், இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாட்டின் சின்னத்தை அறிமுகம் செய்து வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia