சுஷ்மா சுவராஜ் முயற்சியால் சவுதி அரேபிய சிறையில் வாடிய 40 இந்தியர்கள் விடுதலை

சுஷ்மா சுவராஜ் முயற்சியால் சவுதி அரேபிய சிறையில் வாடிய 40 இந்தியர்கள் விடுதலை

Sushma-Swaraj

இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியின் போது தொழிலாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். அதற்கு கண்டனம் தெரி வித்து போராட்டம் நடத்தினார்கள்.

எனவே, இந்திய தொழிலாளர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும் பாலானவர்கள் பீகார், உத்தரபிரதேசம், மே.வங்காளம் மற்றும் ஜார்கண்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு 2 மாதம் மட்டுமே ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தின் போது கம்பெனியில் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு தொழிலாளர்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனால் அவர்கள் சிறையில் வாடி வந்தனர்.

இது குறித்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் கடந்த 2–ந்தேதி மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து முறையிட்டனர். அவர்களை விடுவிக்க உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.

அதை தொடர்ந்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்ட சுஷ்மா சுவராஜ் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும், இது குறித்து சவுதி அரேபிய வெளியுறவு துறை மந்திரியிடமும் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அதை தொடர்ந்து கம்பெனி நஷ்டஈடு தொகையை வலியுறுத்தாமல் தொழிலாளர்கள் இந்தியா திரும்ப பண உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது. அதை தொடர்ந்து இந்திய தொழிலாளர்கள் 40 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து அனைவரும் இந்தியா திரும்பினார்கள். அவர்கள் பீகார் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. அலி அன்வருடன் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

‘எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் மத்திய மந்திரிகள் சல்மான் குர்ஷித், வயலாளர்ரவி, ரஹ்மான்கான் ஆகியோரை சந்தித்து குடும்பத்தினர் முறையிட்டனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டார். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’’ என்றனர்.