சினிமா பாலிடிக்ஸ் எனக்கு தெரியும். அதனால் பாதிக்கப்பட்டவன் நான் என்றார் கமல்ஹாசன்.நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ். ‘ஒரு பக்க கதை என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்‘ பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கிறார். சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காளிதாசை அறிமுகம் செய்து வைத்தார் கமல்ஹாசன். பிறகு அவர் பேசியது:ஓரளவுக்கு புகழ்வந்தால் சிலர் மற்றவர்களை மறந்துவிடுவார்கள். ஆனால் ஜெயராம் அப்படி அல்ல. அதுபோல் அவரது மகன் காளிதாஸும் இருக்க வேண்டும். சினிமாவில் எனக்கு யாரும் எதிரிகள் இல்லை.
அப்படி இருந்தாலும் அவர்கள் ஒரு குடும்பத்தில் சம்பந்தி சண்டைபோட்டுக்கொண்டு பிரிந்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைப்பேன். நினைவு தெரிந்தது முதல் நான் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு டிஎன்ஏவில் (நடிகரின் வாரிசு) நம்பிக்கை கிடையாது. உழைப்பில்தான் நம்பிக்கை. வாரிசாக இருந்தால் மட்டும் யாரும் ஜெயித்துவிட முடியாது. உழைத்தால்தான் ஜெயிக்க முடியும். என்னை வித்தியாசமானவன் என்கிறார்கள். பாலசந்தர் பள்ளியில் படித்தவன். அவரைப்போல்தான் இருப்பேன். அதனால்தான் நான் நடிக்கவும் வந்தோன். இங்கிருக்கும் ஜெயராமுக்கு சினிமா பாலிடிக்ஸ் தெரியாது. ஆனால் எனக்கு சினிமாவில் எப்படியெல்லாம் பாலிடிக்ஸ் செய்கிறார்கள் என்பது தெரியும். அதனால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.இவ்வாறு கமல் பேசினார்.