ஒரு கலைஞனின் போராட்டம் முடிவிற்கு வந்தது – நடிகர் சதீஷ் மரணம்

ஒரு கலைஞனின் போராட்டம் முடிவிற்கு வந்தது - நடிகர் சதீஷ் மரணம்

img-20170604-wa0028

பல மொழி படைப்புகளின் மூலம் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய மலேசிய நடிகர் சதீஷ் ராவ் நேற்று 03/06/2017 அகால மரணம் அடைந்தது மலேசிய கலை உலகத்திற்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியான செய்தியாக அமைந்தது. கலைத்துறையில் மிகப் பெரிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற அவரின் எண்ணம் நேற்று காற்றோடு கலந்து போனது.

சீன மொழி நாடகங்களின் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கிய சதீஷ் ராவ், பின்னர் மலாய், தமிழ், ஆங்கில நாடகம் மற்றும் படங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்.
சீனமொழியில் சரளமாக பேசும் ஆற்றலைக் கொண்டிருந்த சதீஷ், அம்மொழி நாடகங்களில் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதே போல் பல மலாய் நாடகங்களிலும் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். தமிழில் சின்ன சின்ன கதாப்பாதிரங்களில் நடித்த இவர் தமது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகர் கிஷோருடன் இணைந்து தேவடத்தா என்று படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார்.அப்படத்தின் வெளியீட்டு விழாவில், படத்தை எடுத்து முடிக்க தாம் எதிர்கொண்ட இன்னல்களை விம்மி விம்மி அழுதப்படியே கூறிய காட்சி இன்றும் கண்முன்னர் நிழலாடுகிறது.

சிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட அண்ணாமலை நாடகத்தில் மிகச் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்த போது, அக்கதாப்பாத்திரத்திற்காக சதீஷ் தன்னை தயார் படுத்திக் கொண்ட விதம் இயக்குநர் முகமட் அலியின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அடாவடி வில்லன் வேடம் சதீஷுக்கு. வில்லன் தலைமுடியில்லாமல் மொட்டையாக இருக்க வேண்டும் என்ற தகவல் படப்பிடிப்பு இடத்துக்கு சென்ற பிறகுதான் சதீஷுக்கு தெரிய வந்தது. அதனை அறிந்ததும், உடனே தன்னிடம் இருந்த ஷேவிங் மெஷினை எடுத்து மொட்டை அடித்துக் கொண்டு, இயக்குநரின் முன் வந்து நின்றார் சதீஷ். நடிப்பின் மீது சதீஷின் ஈடுபாட்டைக் கண்டு இயக்குநர் வியந்து போனார். இப்படி பல முறை நடிப்புக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர் சதீஷ்.

கலைஞர்கள் அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல ரத்த தான நிகழ்வுகளில் கலந்து கொண்டு பொது மக்கள் நலனுக்காக ரத்தம் வழங்கியுள்ளார். கலைஞர்கள் நலனுக்காக நடத்தப்படும் எந்த நிகழ்ச்சியானாலும் சரி அதில் தனது பங்களிப்பை உறுதி செய்து கொள்வதில் சதீஷ் என்றுமே தவறியதில்லை. கலைஞர்கள் தொடர்புடைய பல போராட்டங்களில் கலந்து கொண்டு தமது சுய கருத்துக்களை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் சதீஷ்.
அண்மையில் அரங்கேறிய சாணக்கிய சபதம் எனும் மேடை இலக்கிய நாடகத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் தயாரிக்கப்பட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், நட்பின் அடிப்படையில் பல படங்களில் பணம் ஏதும் பெறாமலே நடித்தும் கொடுத்திருக்கிறார்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு மலேசிய கலை உலகம் பிரார்த்திக்கிறது.

கட்டுரை:- SP சரவணன்

சதிஸ் ராவ் இறுதிச் சடங்கு பற்றிய விவரம்

மறைந்த மலேசிய நடிகர் திரு. சதிஸ் ராவின் உடல் இன்று 04/06/2017 மாலை 05.00 மணியளவில் அவரது தாயார் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இறுதி சடங்கு நாளை 05/06/2017 மதியம் 12.30 மணியில் இருந்து 02.00 மணிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலாசம்:
No.8, Jalan Tertib 25/32, Tmn Sri Muda, Seksyen 25, Shah Alam.#

ripsathis

#sathisrao

 

fb_img_1496576765932 img-20170604-wa0017