உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 2017

உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 2017

24june_3

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் “இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 24/06/2017 துவங்கி 25/06/2017 வரை நடைபெறுகிறது.

24/06/2017 அன்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தலைவருமான “எழுத்தாண்மைத் ஏந்தல்” பெரு. அ. தமிழ்மணி வரவேற்புரையாற்றினர்.

மாநாட்டில் கலந்து கொண்ட  மத்திய சுகாதார அமைச்சரும், ம இ கா தேசியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கீழ்வருமாறு பேசினார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வந்த நாம் அனைவரும் அரசியல் ரீதியாக இந்தியர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளோம். இருந்தாலும், இந்தியர்களில் பெரும்பாலோர் திராவிப் பின்னணியைக் கொண்டவர்கள் என்பதும், அவர்களின் பெரும்பாலோர் தமிழர்கள் என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மை. அந்த அடிப்படையில் தமிழ் உணர்வு, தமிழ் மொழி சிந்தனை, தமிழ் வாழ்க்கை முறைக்கு நாம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள சிந்திக்க முடியும்.

நமது சமுதாயம் இன்று சமூக ரீதியாக சில அம்சங்களில் சீர்கெட்டிருப்பதற்கு நமது நன்னெறிக் கோட்பாடுகளை நாம் முறையாக பின்பற்றாததையும் ஒரு காரணமாகக் கூறலாம். நமது கல்வி முறை கூட நன்னெறியைப் புகுத்தக் கூடியதாகவும், போதிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆனால், தற்போது அதிலிருந்து வழி தவறிச் சென்று விட்டோம்.
மீண்டும் நாம் நமது நன்னெறிக் கோட்பாடுகளை மக்களிடையே புகுத்துவதற்கு சிறந்த வழிமுறை நமது திருக்குறளாகும்.

நமது பெரும்பாலான மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளின் வழி கல்வி கற்பவர்களாக இருப்பதால் இதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி, இனம், மதம் என்ற பேதமின்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்னெறிக் கோட்பாடுகளையும், ஒழுக்க நெறிகளையும் கொண்டது திருக்குறள் என்ற அடிப்படையில் நாம் இதனை பொது நன்னெறிகளைப் போதிக்கின்ற நூலாகவும், ஊடகமாகவும் கொள்ளலாம்.

முன்னதாக “உலகத் தமிழ் உணர்வாளர் மாநாட்டுக் களஞ்சியம்”(2017) மலரை பிரதமர் துறை துணை அமைச்சரும் ம.இ.கா தேசிய துணை தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி வெளியிட ”உலகநேசன்” இதழ் நிர்வாக ஆசிரியர் திரு. ஈ.எஸ்.மணி பெற்றுக் கொண்டார். விழாவில் மத்திய இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இரு நாள்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டில் பல உலக தமிழ் அறிஞர்கள் கலந்து சிறப்பிக்கின்றனர்.

24june_1 24june_2