slide
Prev
Next
ம.இ.கா புத்ராவின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகள்.*     ம.இ.கா இளைஞர் பிரிவும் மணிபால் சர்வதேச பலகலைக்கழகமும் இணைந்து உதவித்தொகை திட்டம்.*    தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.*     நடிகர் ஜோ இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.*

சற்றுமுன்

21july_salvador_1

ஸ்பெயினில் வாரிசுரிமை கோரி பெண் ஒருவர் தொடுத்த வழக்கு தொடர்பாக சர்ரியலிஸ்ட் பாணி ஓவியம் வரைவதில் புகழ்பெற்றவரான சால்வடார் டாலியின் உடலை, மரபணு சோதனைக்காக தடவியல் நிபுணர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.

நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது, ஓவியர் டாலியின் பற்கள், எலும்புகள் மற்றும் நகங்களிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது தாயுடன் ஓவியர் டாலிக்கு தொடர்பு இருந்ததாக கூறி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஓவியரின் உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தனது தரப்பு வாதங்கள் உண்மை என அந்த பெண் நிரூபித்தால், தற்போது ஸ்பெயின் அரசின் வசம் இருக்கும் டாலியின் சொத்துகளில் அவர் பங்கு பெற முடியும்.

இந்த மரபணு சோதனையின் முடிவுகள் தெரியவர இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள டாலியின் வாழ்க்கை மற்றும் ஓவியங்களை விளக்குவதற்காக அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் ஒன்றின் நிலவறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை மாலை, டாலியின் உடல் தோண்டி எடுக்கப்படுவதை பார்க்க அருங்காட்சியகத்தின் வெளியே மக்கள் கூடியிருந்தனர்.

எனவே தடவியல் நிபுணர்களுக்கு பாதுகாப்பு அளித்த காவல்துறையினர், அவர்களை அருங்காட்சியக கட்டடத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றனர்.

டாலியின் உடலை தோண்டி எடுப்பது குறித்து போதிய முன் அறிவிப்பு வழங்கப்படவில்லை என உள்ளூர் அதிகாரிகளும், டாலியின் பெயர் கொண்ட அறக்கட்டளையினரும் ஆட்சேபணை தெரிவித்ததையும் மீறி இந்த மரபணு மாதிரி சேகரிக்கும் சோதனை நடைபெற்றுள்ளது.

தான் பிறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே தனது தாய்க்கும் ஓவியர் டாலிக்கும் தொடர்பு இருந்ததாக, 1956-ஆம் ஆண்டு பிறந்த டாரட் அட்டை வாசிப்பாளரான ( ஒரு வகை ஜோசியம்) மரியா பிலார் ஆபேல் மார்ட்டினெஸ் கூறுகிறார்.

அவருடைய தாய் ஆண்டோனியா, கடாகுவெஸ் பகுதியில் உள்ள ஓவியரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்த குடும்பத்திடம் வேலை செய்து வந்தார்.

இந்த வழக்கிற்கு தீர்வு காண்பதற்காக ஓவியரின் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என கடந்த மாதம் மேட்ரிட் நீதிபதி உத்தரவிட்டார்.

ஓவியர் டாலிக்கு வாரிசுகள் யாரும் இல்லை எனக் கூறும், அவரின் எஸ்டேட்டை நிர்வகித்து வரும் டாலி அறக்கட்டளை இந்த வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

டாலி தனது எஸ்டேட்டை ஒப்படைத்துச் சென்ற ஸ்பெயின் அரசுக்கு எதிராக மார்டினெஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தன்னுடைய குழந்தை பருவத்தின் போது தனது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் டாலிதான் அவருடைய உண்மையான தந்தை என கூறியதாக மார்ட்டினெஸ் கூறியுள்ளார்.

ஆனால் இந்த வாரிசுரிமை வழக்கு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அயர்லாந்தில் பிறந்த, டாலியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயான் கிப்சன், `ஓவியர் டாலி ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்து, அதன் மூலம் அவர்களுக்கு குழந்தை பிறந்தது என்பதெல்லாம் `சாத்தியமே அல்ல` என தெரிவித்துள்ளார்.

`டாலி எப்போதும் பெருமைப்படுவார்: நான் ஆண்மையற்றவன். நீங்கள் சிறந்த ஓவியராக இருக்க வேண்டுமானால், ஆண்மையற்றவராக இருக்க வேண்டும்.` என அவர் தெரிவித்தார்.

செய்தி : http://www.bbc.com/tamil

 

Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInPin on Pinterest

அண்மை செய்திகள்

Categories: உலகம்

Comments are closed.